Saturday 16 May 2009

என் அப்பாவுக்கு ஒரு அஞ்சலி ...

எனக்கு நினைவு தெரிந்த நாட்கள் முதல் என் அப்பா எனக்கு ரொம்ப வசீகரமானவர். துடிப்பானவர்.என் அப்பா என்பதால் இப்படிச் சொல்லவில்லை .அவருக்கே உரித்தான அந்த மிடுக்கான நடையும் ,நகைச் சுவையும், சுற்றியிருக்கும் எவரையும் சுண்டி இழுக்கும் அவரின் குணமும் எல்லாருக்கும் வந்து அமைந்துவிடாது. அவரிடம் நான் எதைப் பற்றியும் கலந்துரையாட முடியும். அவருக்குக் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை தெரியும். அப்படியே என்னுடலில் புகுந்து என்னைப் போல் யோசிக்கத் தெரியும். நான் மனதில் நினைத்ததை நொடிப் பொளிதில் ஊகிக்கும் குறளி வித்தை தெரியும். எது பிழையென்று தெரிந்தாலும் எவர் முகத்துக்கு எதிரிலும் அதை எடுத்தியெம்பும் துணிவான குணம் அவருக்கு. இதனால் அவர் பலர் கோபத்தைத் தேடிக் கொண்டாலும் அவர் குணத்தை மெச்சும் அவர் நண்பர் கூட்டம் ஒன்று அவரைச் சுற்றி எப்போதும் இருந்து கொண்டு இருக்கும். இன்னும் சொல்லப் போனால் என் அம்மாவின் உறவினர் எல்லாம் என் அப்பாமேல் கூட ஈடுபாடு. இது என் அம்மாவுக்கு கொஞ்சம் உறுத்தல் என்று கூடச் சொல்லலாம்.

என் அப்பாவைப் பற்றிய முதல் நினைவு பசுமையாக இன்னும் நினைவில் நிற்கிறது. அப்போ அப்பா கொழும்பில் வேலை செய்கிறார், என் அம்மா ஒரு ஆசிரியை .வேலை மாற்றம் கொழும்பிற்குக் கிடைக்காததால் நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறோம். என் அம்மம்மாவின் அரவணைப்பில் நாங்கள் வளர்ந்தோம். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அப்பா எம்மிடம் வந்து மூன்று நான்கு நாட்கள் நின்று போவார். நாட்களை எண்ணியபடியே அவர் வருகைக்கு நாங்கள் காத்திருப்போம். வரும்போது நாங்கள் கேட்கும் அத்தனை பொருளும் வாங்கி வருவார். ஆனால் உடனே எதையும் தர மாட்டார். நாங்கள் அவரைச் சுற்றிச் சுற்றி வருவதையும், ஆவலோடு எப்போ பெட்டியை திறப்பார் என்று பொறுமையின்றி சலித்துக் கொள்வதையும் மிகவும் ரசிப்பார். நாங்கள் கேட்ட பொருட்களை வாங்க மறந்து விட்டதாகச் சொல்லி எங்களை அழக் கூட வைப்பார். இடையில் அம்மா வந்து 'ஒவ்வொரு முறையும் ஒரு கூத்துப் போடாமல் ஒன்றும் செய்ய மாட்டீர்கள் ' என்று ஒருமுறை தன் அதிருப்தியைக் காட்டிய பின்புதான் ,பெட்டியைத் திறப்பார். அதுவரை நாங்களும் சாப்பிடாமல் , விளையாடாமல் அவர் அருகிலேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்போம்.

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எனக்கு ஐந்து வயதிருக்கும் என்று நினைக்கிறேன். அப்பா வாங்கிவந்த புது பல் விளக்கியில் பசையைப் போட்டு பல் விளக்கியபடி நானும், தம்பியும் நிற்கிறோம். எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்த சரோ அக்கா ஏதோ விடயமாக வந்தவள் எங்களை விசித்திரமாகப் பார்க்கிறாள். என் அம்மம்மாவுக்கு எங்கள் கோபால் பற்பொடியை விட இது என்ன கொம்பு என்ற நினைப்பு. உடனே இவள் அப்பன் கொழும்பில் கப்பல் ஓடுகிறான். அதுதான் இந்தக் கூத்து என்று கிண்டலாகச் சொல்லுகிறாள். அந்த வயதில் எனக்கு அவள் கிண்டல் விளங்கவேயில்லை . நானும் என் மனதில் அப்பா கப்பல் ஓட்டுகிறார் என்று நம்பி விட்டேன்.

என் அம்மம்மாவுக்கு நாங்கள் அப்பாவைக் கண்டதும் தன்னை விட்டு விட்டு அவரைச் சுற்றிச் சுற்றி வருவதும் கும்மாளம் போடுவதும் பெரிய அடிப்பு. ஏதாவது தொண தொண எனச் சொல்லிக் கொண்டேயிருப்பாள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவளது எந்த மருமகனும் அவளுக்கு முன்னால் நேருக்கு நேர் நின்று கதைக்க மாட்டார்கள். என் அப்பா மட்டும் அவள் பக்கத்தில் போயிருந்து அவள் பழைய கதையெல்லாம் கேட்பார். அவளும் அப்பா இல்லாதபோது ' அவன் எனக்கு மருமகனில்லை, மகன் ' என்று பெருமையாய் சொல்லிக் கொள்வாள். அப்பாவும் அவள் சொன்ன கதைகளை அவளுக்கே திருப்பிச் சொல்லி வம்புக்கு இழுப்பார். இப்படி மாமி மருமகன் அந்நியோனிய உறவைப் பார்த்து வியந்தவர்கள் பலர்.


( தொடரும் ..........)

8 comments:

  1. தங்களின் பதிவை படித்துவிட்டு, மீண்டும் தலைப்பைப் பார்த்தேன்... மனம் கலங்கிவி்ட்டது. எவ்வளவு பெரிய இழப்பை தாங்கள் சந்தித்திருக்கிறீ்ர்கள் என்பதை அறியமுடிகிறது.

    ReplyDelete
  2. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிகவும் நன்றி. முகந் தெரியாத எனக்காக உலகில் ஒரு மூலையில் நீங்கள் மனங் கலங்கியது என் மனதைத் தொட்டது

    ReplyDelete
  3. தொடரட்டும் இந்த இனிய பதிவு . . .

    ReplyDelete
  4. உங்கள் வருகைக்கும் என் வலையத்தைத் தொடர்வதற்கும் நன்றி வசந்த். விரைவில் என் பதிவைத் தொடர்வேன்.

    ReplyDelete
  5. நெகிழ்வான பதிவு...

    ReplyDelete
  6. வாங்க புதியவன். எங்கே உங்களைக் காணவில்லை என்று யோசித்தேன்.

    ReplyDelete

வருகைக்கு நன்றி. உங்கள் கருத்தைச் சொல்ல மறக்காதீர்கள்!