Thursday, 28 May 2009

என் அப்பாவுக்கு ஒரு அஞ்சலி-பகுதி 3

காலம் எதற்காகவும் காத்திருக்காமல் இயந்திர கதியில் ஓடியது. அப்பா வேலையை இழந்து மூன்று வருடங்களுக்குப் பின்பு தான் அவர் வழக்கு கோட்டுக்கு வந்தது. அவர் பக்கம் வாதாட ,ஒரு நல்ல வழக்கறிஞரை ஒழுங்கு செய்ய அம்மாவின் நகைகள் ஒவ்வொன்றாக அடைவு கடைக்குப் போனது. ஒவ்வொரு முறையும் வழக்கு பிறிதொரு திகதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது. அப்படியே எங்கள் வீட்டுச் சச்சரவுகளும் எங்களுக்குப் பழகிப் போனது. அவர்கள் சண்டையைச் சட்டை செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்த நான் கற்றுக் கொண்டேன். அம்மா வேலை செய்ததால் தான் எங்கள் குடும்பத்தை ஓட்ட முடிந்தது என்ற உண்மையை உணர்ந்ததால் இயல்பாகவே படிப்பில் நாட்டம் ஏற்பட்டது.

இரண்டு வருடங்கள் கோட்டுக்கு அலைந்து , அம்மாவின் பாதி நகைகள் அழிந்து போன பின்பு , அப்பா நிரபராதி என்ற தீர்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த இன்பமான செய்தியை கொண்டாடும் நிலையில் எவர் மன நிலையும் இருக்கவில்லை. அந்த இறைவன் விளையாடிய சதுரங்க விளையாட்டில் நாங்கள் எல்லோரும் பகடைக் காய்களாகிப் போனோம். அப்பா வேலையே ஆரம்பித்தாலும் அவரால் குடியை நிறுத்த முடியவில்லை. அவருக்கு அங்கு வேலை செய்வதிலும் இஸ்டம் இல்லை. அவர் தரத்தில் வேலை செய்த அவரது நண்பர்கள் வேலை உயர்ச்சியினால் அவரைவிட உயர்ந்த பதவியில் இருந்தார்கள். தினம் அவர் தள்ளாட எங்கள் குடும்பமும் அவரை விட்டு தள்ளித் தள்ளிப் போனது.

இந்த நிலையில் எனக்குப் பல்கலைக் கழக அனுமதி கிடைத்தது. உயர் கல்வி கற்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியும் , நானில்லாமல் இவர்களை யார் விலக்குப் பிடிக்கப் போகிறார்கள் என்ற திகிலும் ஒன்றாக என்னைத் தாக்க அப்படியே அதிர்ந்து போனேன். வேறு வழியின்றி வேதனையைச் சுமந்து கொண்டு பேராதனைக்குச் சென்றேன். ஒன்றிரண்டு மதங்களில் ,நாட்டு நிலவரத்தைக் காரணமாக்கி , அம்மா திரும்ப யாழ்ப்பாணத்துக்கு வேலை மாற்றம் எடுத்து என் சகோதரர்களுடன் போய் விட்டாள். அப்பா மீண்டும் தனியாகி விட்டார். வேலை இல்லாதபோது விட்டுப் போனால்தான் பிழை. இப்போ அவர் பழையபடி வேலை செய்கிறார். என்மேல் யாரும் குற்றம் சொல்ல முடியாது என்பது அவள் வாதம்.
அப்பா சொன்னபடியே என் செலவுக்குப் பணம் அனுப்பினார். அடிக்கடி என்னை வந்து பார்த்தார். எங்கள் எல்லோரது பிரிவும் அவரை வாட்டியதை என்னால் உணர முடிந்தது. ஆனால் அந்த வயதில் அப்பா என்னைச் சந்திக்க பல்கலைக் கழகம் வருவதை நான் பெரிய அவமானமாகக் கருதினேன். 'குடித்த பின் என்னிடம் வரக் கூடாது' என்று அவருக்குக் கட்டளை போட்டேன். அதை நினைவில் வைத்து நிதானமாக என்னிடம் வருவார். ஆனால் போகும்போது ஏதாவது மது சாலைக்குள் புகுந்து நிலை தெரியாமல் அருந்தி விடுவார். நண்பர்கள் மூலமாக எனக்குச் செய்தி கிட்டையில் நான் வெகுண்டு போவேன்.

காலம் விரைந்தோடியதில் எங்கள் குடும்பம் திக்குத் திக்காகி விட்டது. உயிருக்கு ஆபத்து என்று தம்பிமார் முதலில் வெளிநாடு போனார்கள். அம்மாவும் மற்றவர்களும் சென்னையில் வந்து குடியேறினார்கள். எனது படிப்பு முடிய நானும் கொழும்பில் ஆசிரியையாக வேலை பார்க்கத் தொடங்கினேன் . அப்போதான் எனக்கு அப்பாவோடு நண்பர்கள் போல் அளவளாவும் சந்தர்ப்பம் கிடைத்தது. 'ஏன் இப்படி எல்லாம் நடந்தது?' என்று அலசிப் பார்க்கும் பக்குவம் நம்மிருவருக்கும் அப்போ இருந்தது. நான் நினைக்கும் முன்னே என்ன கேட்கப் போகிறேன் என்று அவர் ஊகிக்கும் போது நான் அவரிடம் மிகவும் நெருங்கிப் போனேன். எவர் எங்கே போனாலும், நான் அப்பாவை விட்டு எங்கும் போகக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

(தொடரும்..)

6 comments:

  1. இந்த தொடர் உங்கள் அப்பாவுக்கும் உங்களுமிடையேயான பாச உறவின் துளிகளை நிச்சயம் தெளிக்கும்..

    எழுத்தாக்கம் அருமையாக இருக்கிறது!!!

    ReplyDelete
  2. உங்கள் அப்பாவின் மீது நீங்கள் வைத்திருக்கும் பாசம் நெகிழவைக்கிறது தமிழிச்சி...

    பொதுவாக அம்மாவின் பாசத்தை பற்றி நிறைய எழுதுவார்கள் அப்பாவின் பாசத்தைப் பற்றிய பதிவுகள் மிகவும் குறைவாகவே உள்ளது...அந்த வகையில் இந்த பதிவு மனதில் இடம் பெறுகிறது
    தொடர்ந்து எழுதுங்கள் தமிழிச்சி...

    ReplyDelete
  3. ஆதவா ! உங்கள் கருத்திற்கும் ஆதரவுக்கும் நன்றி.

    ReplyDelete
  4. புதியவன், நீங்கள் தொடர்ந்து தரும் கருத்துகளுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  5. அப்பாவைப்பற்றி
    அருமையான
    பதிவுங்க!!

    ஏன் தொடர்ந்து எழுதவில்லை!!

    ReplyDelete
  6. வாங்க தேவகுமார். நேரமும் மூடும் ஒன்றாக அமையாததால் எழுதவில்லை.
    விரைவில் எழுதுவேன். கருத்துக்கு நன்றி.

    ReplyDelete

வருகைக்கு நன்றி. உங்கள் கருத்தைச் சொல்ல மறக்காதீர்கள்!