Saturday, 23 May 2009

என் அப்பாவுக்கு ஒரு அஞ்சலி- பகுதி 2

எனக்கு நல்ல நினைவிருக்கிறது ,எனக்கு அப்போ எட்டு வயதிருக்கும். பலத்த முயற்சியின் பின்னர் அம்மாவுக்கு கொழும்புக்கு வேலை மாற்றம் கிடைக்கிறது. முதன் முறையாக நாங்கள் குடும்பமாகச் சேர்ந்து வாழப் போகும் நேரமது. எங்கள் மகிழ்ச்சியை விபரிக்க முடியாது. அம்மம்மா எங்களுடன் வர மறுத்ததால் சிறிது கவலைப் பட்டாலும் தினமும் அப்பாவுடன் இருக்கப் போகிறோம் என்ற எண்ணம் எங்களை மெய் மறக்கச் செய்தது. கொழும்பு வந்தபோது, அம்மாவுக்கு மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளோடு வந்த எங்களுக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. தனிமை தந்த விரக்தியில் அப்பா கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கு அடிமையாகி விட்டிருந்தார். எத்தனை முயற்சி செய்தும் அவரால் அந்தப் பழக்கத்தை விட்டு விட முடியவில்லை.

புதிய இடத்தில் , புதிய பாடசாலையில்பல பிரச்சனைகளுக்கு மத்தியில் அல்லல் பட்ட எனக்கும் என் சகோதரர்களுக்கும் அப்பாவின் நிலைமை மிகக் கவலையைக் கொடுத்தது. இது போதாதென்று விதி வசத்தால் அப்பா ஒரு சிக்கலில் மாட்டி அவர் வேலையே இழந்தார். அவரது புதிய குடிப் பழக்கமும் எல்லோரையும் நம்பிவிடும் குணமும், அவரைச் சுற்றி வந்த சிங்கள நண்பர்களும் அதற்குக் காரணம் என்று பின்னர் அம்மா சொன்னாள். அப்பா மத்திய வங்கியில் வெளி நாட்டு இலாகாவில் ஒரு பொறுப்பான பதவியில் வேலை பார்த்தாராம். ஒரு பிழையான படிவத்தில் இவர் கையெழுத்துப் போட்டிருக்கிரார். இவரது நான்கு சிங்கள நண்பர்கள் அந்தப் படிவத்தில் முதலில் கையெழுத்துப் போட்டிருந்திருக்கிரார்கள். அவர்களை நம்பி இவர் படிவத்தைப் பரீசீலனை செய்யாமல் விட்டிருக்கிறார். வங்கி இவர்கள் ஐந்து பேரையும் வேலையில் இருந்து நிறுத்தி அவர்கள் மேல் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் அப்பா ஐந்தாவது குற்றவாளி . வழக்கு முடிந்து இவர் நிரபராதி என்று உறுதியாகும் வரை அவருக்கு வேலை நீக்கம். ஆனால் அவர் குற்றவாளி என்று உறுதியாகாததால், அவர்கள் அவருக்கு சம்பளம் கொடுத்தார்கள். பிரச்சனை என்னவென்றால் அப்பா எங்கும் வேலைக்குப் போக முடியவில்லை. மனைவி வேலைக்குப் போக வீட்டிலிருக்கவும் விரும்பவில்லை. அவரை முதலே தொற்றியிருந்த குடிப் பழக்கம் முற்றாக சொந்தம் கொண்டாடி விட்டது. முழு நாளையும் மது சாலையில் கழிக்கத் தொடங்கினார். காலையில் நாம் பார்க்கும் அப்பாவுக்கும் இரவில் தள்ளாடியபடி வாடகை வண்டியில் வந்திறங்கும் அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

எனக்கு நினைவிருக்கிறது. நான் பெரியவளானபோது கண்கலங்கிய வண்ணம் அப்பா என் தலைமேல் கைவைத்து இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணினார். சொன்ன படியே நான்கு மாதங்கள் அறவே குடியைத் தொடாமல் இருந்தார். அந்த நாட்கள் என்னால் மறக்க முடியாத பொன்னான நாட்கள். அம்மாவுக்கு சமையல் நன்றாக வராது . யாழ்ப்பாணத்தில் அம்மம்மா சமையல் செய்ய இவள் செல்லப் பிள்ளையாக இருந்து விட்டாள். அப்பா தனியே இருந்ததால் அவர் அதில் நன்கு தேறியிருந்தார். ' நான் படும் கஷ்டம் இன்னொருத்தன் படக் கூடாது''என்று சொல்லி எனக்கும் தங்கைக்கும் சமையல் பழக்கினார். எங்களுக்கு இரவில் பாடம் சொல்லித் தந்தார். ஒருநாள் காலை எழுந்திருந்தவர் நடக்க முடியாமல் ஒரு காலை நிலத்தில் வைக்க மாட்டாமல் தவித்தார். பதறிப் போனோம். குடியை திடீரென நிறுத்தியதுதான் காரணம் என்று டாக்டர் சொன்னாராம். அப்பா பயந்து விட்டார். ஒரு போத்தலை என்னிடம் தந்து விட்டு ''ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு கொஞ்சம் நீயே தா'' என்று சொன்னார். நானும் சம்மதித்தேன். வேதாளம் திரும்பவும் முருங்க மரம் ஏறிய கதையாகி விட்டது.

ஆசைகள் எல்லாம் நிராசையான வெறுப்பும், குடும்பப் பொறுப்பும், வேலைப் பழுவும் என் அம்மாவை வாழ்க்கையின் ஓரத்திற்கு ஓட்டி விட்டதை நாங்கள் ஒவ்வொரு நிமிடமும் உணர முடிந்தது. அவளால் எதனையும் தீர ஆலோசிக்க முடியவில்லை. தன் ஆத்திரத்தை வெளிப்படுத்த தினம் காலையில் எழுந்ததும் என் அப்பாவோடு சண்டையை ஆரம்பிக்கத் தொடங்கி விட்டாள். '' இரண்டு கையடித்தால் தானே சத்தம் வரும். ஒரு கையாடினால் குற்றமில்லை '' என்ற பாணியில் , தன் தலையை அன்றைய தினப் பத்திரிகைக்குள் ஒழித்துக் கொண்டிருப்பார் அப்பா. அவள் போடும் அத்தனை கூச்சல்களையும் இவர் எப்படிக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று என் மனம் அடித்துக் கொள்ளும். அவரது இந்த அசட்டையான போக்கு என் அம்மாவை ஆத்திரப் படுத்தி அழ வைக்கும். தினம் இரவில் தள்ளாடியபடி. வீடு வரத் தொடங்கினார். அதுமட்டுமல்ல .அம்மா காலையில் போட்ட கூச்சல்களுக்கும் ,கேட்ட கேள்விகளுக்கும் இரவில் எகத்தாளமாகப் பதில் சொன்னார். இப்படியே தினம் தினம் இந்தக் கதை தொடர்ந்து கொண்டிருந்தது. அம்மாவும் நிறுத்தவில்லை. அப்பாவும் நிறுத்தவில்லை. குடும்பத்தில் மூத்தவளாய் நான் எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாமல் தத்தளித்தேன். ஏனோ என் அடி மனத்தில் என் அப்பா 'ரொம்பப் பாவம்' என்ற உணர்ச்சி. சரி ,தப்பு இன்னும் எனக்குத் தெரியாது.

(தொடரும்)

11 comments:

  1. //நான் பெரியவளானபோது கண்கலங்கிய வண்ணம் அப்பா என் தலைமேல் கைவைத்து இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணினார். //

    உணர்வுப் பூர்வமான வரிகள் தமிழிச்சி.

    //ஏனோ என் அடி மனத்தில் என் அப்பா 'ரொம்பப் பாவம்' என்ற உணர்ச்சி. சரி ,தப்பு இன்னும் எனக்குத் தெரியாது.//

    இது எல்லோருக்கும் இருக்கும் நிலைப்பாடு தான்...

    ReplyDelete
  2. பிரச்சனை என்னவென்றால் அப்பா எங்கும் வேலைக்குப் போக முடியவில்லை. மனைவி வேலைக்குப் போக வீட்டிலிருக்கவும் விரும்பவில்லை. அவரை முதலே தொற்றியிருந்த குடிப் பழக்கம் முற்றாக சொந்தம் கொண்டாடி விட்டது. முழு நாளையும் மது சாலையில் கழிக்கத் தொடங்கினார். காலையில் நாம் பார்க்கும் அப்பாவுக்கும் இரவில் தள்ளாடியபடி வாடகை வண்டியில் வந்திறங்கும் அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
    ///
    இது கண்ணால் பார்க்க முடியாத கொடுமைங்க!!

    ReplyDelete
  3. குடும்பத்தில் மூத்தவளாய் நான் எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாமல் தத்தளித்தேன். ஏனோ என் அடி மனத்தில் என் அப்பா 'ரொம்பப் பாவம்' என்ற உணர்ச்சி. சரி ,தப்பு இன்னும் எனக்குத் தெரியாது.////

    மூத்த குழந்தைகளின் மனநிலை மூத்த பையனான எனக்குப் புரிகிறது!!

    ReplyDelete
  4. வாங்க புதியவன். கருத்திற்கு ஆதரவிற்கும் நன்றி.

    ReplyDelete
  5. வாங்க தேவகுமார், ஒரு சிலரால் தான் சில உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடியும். உங்கள் கருத்திற்கு மிக நன்றி.

    ReplyDelete
  6. குடிகாரர்களால்தான் ரொம்ப குடும்பம் கெடடு அழிகின்றன. விளையாட்டாய் ஆரம்பித்து பின்னால் விடமுடியாமல் அவஸ்தை படுவார்கள். தங்கள் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் மிகவும் உருக்கமாக இருக்கின்றன...

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி அன்புமணி. அப்பா குடியை விளையாட்டாக ஆரம்பிக்கவில்லை. விரக்தியில்தான் ஆரம்பித்தார். அந்த வேதனைக்கு யாரைக் குறை சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. நிச்சயமாய் என் அப்பா குற்றவாளியில்லை.

    ReplyDelete
  8. உணர்வுபூர்வமாக இருக்கிறது.
    தொடருங்கள்.

    ReplyDelete
  9. உங்கள் கருத்திற்கு நன்றி வசந்த். விரைவில் தொடர்வேன்.

    ReplyDelete
  10. ஒரு அப்பாவைப் பற்றி விளக்கமாக எழுத ஆரம்பித்திருக்கும் இத்தொடர் போல வேறேதும் படித்ததில்லை.. பார்க்கப்போனால், அப்பாவைப் பற்றி, அவரது எண்ணங்கள், உணர்வுகள், காதல், போன்றவற்றை யாராவது சிந்தித்திருப்பார்களோ என்றால் இல்லையென்றே தோணுகிறது

    அப்பா என்பது பல முரண்கள், தன்னம்பிக்கை, ஊக்கம், மறைமுக வளர்ச்சி ஆகியவற்றின் கூட்டாகவே இருக்கும்.. சரியான புரிதலற்றவர்கள் அப்பாவை ஏசுவார்கள்...

    இரண்டாம் பாகத்தில் நீங்கள் எழுதியிருப்பதைப் போன்று, குடிப்பழக்கம் மிக்கவராக இருந்த என் அப்பா, இதயக் கோளாறு ஏற்பட்டு, குடிப்பழக்கத்தை நிறுத்தியவர், தற்சமயம் வேலையில்லாமல் அம்மாவின் வசவுகளை வாங்கிக் கட்டிக் கொண்டிருப்பவர்.... எல்லோருடைய வீட்டிலும் வேலையில்லாத அப்பாக்கள் இப்படித்தான் இருப்பார்களோ என்னவோ?

    தொடருங்கள் தமிழிச்சி... உணர்வுகளைக் கிளறிவிடும் இத்தொடரில் நான் நிச்சயம் இருப்பேன்.!!!!

    அன்புடன்
    ஆதவா

    ReplyDelete
  11. நன்றி ஆதவா! உங்கள் அறிமுகம் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. முதல் முதலில் எழுவது அப்பாவைப் பற்றி இருக்க வேண்டும் என்று தோன்றியது. தொடர்ந்து உங்கள் கருத்துக்களைத் தாருங்கள்.

    ReplyDelete

வருகைக்கு நன்றி. உங்கள் கருத்தைச் சொல்ல மறக்காதீர்கள்!