Thursday, 28 May 2009

என் அப்பாவுக்கு ஒரு அஞ்சலி-பகுதி 3

காலம் எதற்காகவும் காத்திருக்காமல் இயந்திர கதியில் ஓடியது. அப்பா வேலையை இழந்து மூன்று வருடங்களுக்குப் பின்பு தான் அவர் வழக்கு கோட்டுக்கு வந்தது. அவர் பக்கம் வாதாட ,ஒரு நல்ல வழக்கறிஞரை ஒழுங்கு செய்ய அம்மாவின் நகைகள் ஒவ்வொன்றாக அடைவு கடைக்குப் போனது. ஒவ்வொரு முறையும் வழக்கு பிறிதொரு திகதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது. அப்படியே எங்கள் வீட்டுச் சச்சரவுகளும் எங்களுக்குப் பழகிப் போனது. அவர்கள் சண்டையைச் சட்டை செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்த நான் கற்றுக் கொண்டேன். அம்மா வேலை செய்ததால் தான் எங்கள் குடும்பத்தை ஓட்ட முடிந்தது என்ற உண்மையை உணர்ந்ததால் இயல்பாகவே படிப்பில் நாட்டம் ஏற்பட்டது.

இரண்டு வருடங்கள் கோட்டுக்கு அலைந்து , அம்மாவின் பாதி நகைகள் அழிந்து போன பின்பு , அப்பா நிரபராதி என்ற தீர்ப்புக் கிடைத்தது. ஆனால் அந்த இன்பமான செய்தியை கொண்டாடும் நிலையில் எவர் மன நிலையும் இருக்கவில்லை. அந்த இறைவன் விளையாடிய சதுரங்க விளையாட்டில் நாங்கள் எல்லோரும் பகடைக் காய்களாகிப் போனோம். அப்பா வேலையே ஆரம்பித்தாலும் அவரால் குடியை நிறுத்த முடியவில்லை. அவருக்கு அங்கு வேலை செய்வதிலும் இஸ்டம் இல்லை. அவர் தரத்தில் வேலை செய்த அவரது நண்பர்கள் வேலை உயர்ச்சியினால் அவரைவிட உயர்ந்த பதவியில் இருந்தார்கள். தினம் அவர் தள்ளாட எங்கள் குடும்பமும் அவரை விட்டு தள்ளித் தள்ளிப் போனது.

இந்த நிலையில் எனக்குப் பல்கலைக் கழக அனுமதி கிடைத்தது. உயர் கல்வி கற்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியும் , நானில்லாமல் இவர்களை யார் விலக்குப் பிடிக்கப் போகிறார்கள் என்ற திகிலும் ஒன்றாக என்னைத் தாக்க அப்படியே அதிர்ந்து போனேன். வேறு வழியின்றி வேதனையைச் சுமந்து கொண்டு பேராதனைக்குச் சென்றேன். ஒன்றிரண்டு மதங்களில் ,நாட்டு நிலவரத்தைக் காரணமாக்கி , அம்மா திரும்ப யாழ்ப்பாணத்துக்கு வேலை மாற்றம் எடுத்து என் சகோதரர்களுடன் போய் விட்டாள். அப்பா மீண்டும் தனியாகி விட்டார். வேலை இல்லாதபோது விட்டுப் போனால்தான் பிழை. இப்போ அவர் பழையபடி வேலை செய்கிறார். என்மேல் யாரும் குற்றம் சொல்ல முடியாது என்பது அவள் வாதம்.
அப்பா சொன்னபடியே என் செலவுக்குப் பணம் அனுப்பினார். அடிக்கடி என்னை வந்து பார்த்தார். எங்கள் எல்லோரது பிரிவும் அவரை வாட்டியதை என்னால் உணர முடிந்தது. ஆனால் அந்த வயதில் அப்பா என்னைச் சந்திக்க பல்கலைக் கழகம் வருவதை நான் பெரிய அவமானமாகக் கருதினேன். 'குடித்த பின் என்னிடம் வரக் கூடாது' என்று அவருக்குக் கட்டளை போட்டேன். அதை நினைவில் வைத்து நிதானமாக என்னிடம் வருவார். ஆனால் போகும்போது ஏதாவது மது சாலைக்குள் புகுந்து நிலை தெரியாமல் அருந்தி விடுவார். நண்பர்கள் மூலமாக எனக்குச் செய்தி கிட்டையில் நான் வெகுண்டு போவேன்.

காலம் விரைந்தோடியதில் எங்கள் குடும்பம் திக்குத் திக்காகி விட்டது. உயிருக்கு ஆபத்து என்று தம்பிமார் முதலில் வெளிநாடு போனார்கள். அம்மாவும் மற்றவர்களும் சென்னையில் வந்து குடியேறினார்கள். எனது படிப்பு முடிய நானும் கொழும்பில் ஆசிரியையாக வேலை பார்க்கத் தொடங்கினேன் . அப்போதான் எனக்கு அப்பாவோடு நண்பர்கள் போல் அளவளாவும் சந்தர்ப்பம் கிடைத்தது. 'ஏன் இப்படி எல்லாம் நடந்தது?' என்று அலசிப் பார்க்கும் பக்குவம் நம்மிருவருக்கும் அப்போ இருந்தது. நான் நினைக்கும் முன்னே என்ன கேட்கப் போகிறேன் என்று அவர் ஊகிக்கும் போது நான் அவரிடம் மிகவும் நெருங்கிப் போனேன். எவர் எங்கே போனாலும், நான் அப்பாவை விட்டு எங்கும் போகக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்.

(தொடரும்..)

Saturday, 23 May 2009

என் அப்பாவுக்கு ஒரு அஞ்சலி- பகுதி 2

எனக்கு நல்ல நினைவிருக்கிறது ,எனக்கு அப்போ எட்டு வயதிருக்கும். பலத்த முயற்சியின் பின்னர் அம்மாவுக்கு கொழும்புக்கு வேலை மாற்றம் கிடைக்கிறது. முதன் முறையாக நாங்கள் குடும்பமாகச் சேர்ந்து வாழப் போகும் நேரமது. எங்கள் மகிழ்ச்சியை விபரிக்க முடியாது. அம்மம்மா எங்களுடன் வர மறுத்ததால் சிறிது கவலைப் பட்டாலும் தினமும் அப்பாவுடன் இருக்கப் போகிறோம் என்ற எண்ணம் எங்களை மெய் மறக்கச் செய்தது. கொழும்பு வந்தபோது, அம்மாவுக்கு மட்டுமல்ல, எதிர்பார்ப்புகளோடு வந்த எங்களுக்கும் பேரதிர்ச்சி காத்திருந்தது. தனிமை தந்த விரக்தியில் அப்பா கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கு அடிமையாகி விட்டிருந்தார். எத்தனை முயற்சி செய்தும் அவரால் அந்தப் பழக்கத்தை விட்டு விட முடியவில்லை.

புதிய இடத்தில் , புதிய பாடசாலையில்பல பிரச்சனைகளுக்கு மத்தியில் அல்லல் பட்ட எனக்கும் என் சகோதரர்களுக்கும் அப்பாவின் நிலைமை மிகக் கவலையைக் கொடுத்தது. இது போதாதென்று விதி வசத்தால் அப்பா ஒரு சிக்கலில் மாட்டி அவர் வேலையே இழந்தார். அவரது புதிய குடிப் பழக்கமும் எல்லோரையும் நம்பிவிடும் குணமும், அவரைச் சுற்றி வந்த சிங்கள நண்பர்களும் அதற்குக் காரணம் என்று பின்னர் அம்மா சொன்னாள். அப்பா மத்திய வங்கியில் வெளி நாட்டு இலாகாவில் ஒரு பொறுப்பான பதவியில் வேலை பார்த்தாராம். ஒரு பிழையான படிவத்தில் இவர் கையெழுத்துப் போட்டிருக்கிரார். இவரது நான்கு சிங்கள நண்பர்கள் அந்தப் படிவத்தில் முதலில் கையெழுத்துப் போட்டிருந்திருக்கிரார்கள். அவர்களை நம்பி இவர் படிவத்தைப் பரீசீலனை செய்யாமல் விட்டிருக்கிறார். வங்கி இவர்கள் ஐந்து பேரையும் வேலையில் இருந்து நிறுத்தி அவர்கள் மேல் வழக்குத் தொடர்ந்தது. அந்த வழக்கில் அப்பா ஐந்தாவது குற்றவாளி . வழக்கு முடிந்து இவர் நிரபராதி என்று உறுதியாகும் வரை அவருக்கு வேலை நீக்கம். ஆனால் அவர் குற்றவாளி என்று உறுதியாகாததால், அவர்கள் அவருக்கு சம்பளம் கொடுத்தார்கள். பிரச்சனை என்னவென்றால் அப்பா எங்கும் வேலைக்குப் போக முடியவில்லை. மனைவி வேலைக்குப் போக வீட்டிலிருக்கவும் விரும்பவில்லை. அவரை முதலே தொற்றியிருந்த குடிப் பழக்கம் முற்றாக சொந்தம் கொண்டாடி விட்டது. முழு நாளையும் மது சாலையில் கழிக்கத் தொடங்கினார். காலையில் நாம் பார்க்கும் அப்பாவுக்கும் இரவில் தள்ளாடியபடி வாடகை வண்டியில் வந்திறங்கும் அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

எனக்கு நினைவிருக்கிறது. நான் பெரியவளானபோது கண்கலங்கிய வண்ணம் அப்பா என் தலைமேல் கைவைத்து இனிமேல் குடிக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணினார். சொன்ன படியே நான்கு மாதங்கள் அறவே குடியைத் தொடாமல் இருந்தார். அந்த நாட்கள் என்னால் மறக்க முடியாத பொன்னான நாட்கள். அம்மாவுக்கு சமையல் நன்றாக வராது . யாழ்ப்பாணத்தில் அம்மம்மா சமையல் செய்ய இவள் செல்லப் பிள்ளையாக இருந்து விட்டாள். அப்பா தனியே இருந்ததால் அவர் அதில் நன்கு தேறியிருந்தார். ' நான் படும் கஷ்டம் இன்னொருத்தன் படக் கூடாது''என்று சொல்லி எனக்கும் தங்கைக்கும் சமையல் பழக்கினார். எங்களுக்கு இரவில் பாடம் சொல்லித் தந்தார். ஒருநாள் காலை எழுந்திருந்தவர் நடக்க முடியாமல் ஒரு காலை நிலத்தில் வைக்க மாட்டாமல் தவித்தார். பதறிப் போனோம். குடியை திடீரென நிறுத்தியதுதான் காரணம் என்று டாக்டர் சொன்னாராம். அப்பா பயந்து விட்டார். ஒரு போத்தலை என்னிடம் தந்து விட்டு ''ஒவ்வொரு நாளும் எனக்கு ஒரு கொஞ்சம் நீயே தா'' என்று சொன்னார். நானும் சம்மதித்தேன். வேதாளம் திரும்பவும் முருங்க மரம் ஏறிய கதையாகி விட்டது.

ஆசைகள் எல்லாம் நிராசையான வெறுப்பும், குடும்பப் பொறுப்பும், வேலைப் பழுவும் என் அம்மாவை வாழ்க்கையின் ஓரத்திற்கு ஓட்டி விட்டதை நாங்கள் ஒவ்வொரு நிமிடமும் உணர முடிந்தது. அவளால் எதனையும் தீர ஆலோசிக்க முடியவில்லை. தன் ஆத்திரத்தை வெளிப்படுத்த தினம் காலையில் எழுந்ததும் என் அப்பாவோடு சண்டையை ஆரம்பிக்கத் தொடங்கி விட்டாள். '' இரண்டு கையடித்தால் தானே சத்தம் வரும். ஒரு கையாடினால் குற்றமில்லை '' என்ற பாணியில் , தன் தலையை அன்றைய தினப் பத்திரிகைக்குள் ஒழித்துக் கொண்டிருப்பார் அப்பா. அவள் போடும் அத்தனை கூச்சல்களையும் இவர் எப்படிக் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று என் மனம் அடித்துக் கொள்ளும். அவரது இந்த அசட்டையான போக்கு என் அம்மாவை ஆத்திரப் படுத்தி அழ வைக்கும். தினம் இரவில் தள்ளாடியபடி. வீடு வரத் தொடங்கினார். அதுமட்டுமல்ல .அம்மா காலையில் போட்ட கூச்சல்களுக்கும் ,கேட்ட கேள்விகளுக்கும் இரவில் எகத்தாளமாகப் பதில் சொன்னார். இப்படியே தினம் தினம் இந்தக் கதை தொடர்ந்து கொண்டிருந்தது. அம்மாவும் நிறுத்தவில்லை. அப்பாவும் நிறுத்தவில்லை. குடும்பத்தில் மூத்தவளாய் நான் எந்தப் பக்கம் சாய்வது என்று தெரியாமல் தத்தளித்தேன். ஏனோ என் அடி மனத்தில் என் அப்பா 'ரொம்பப் பாவம்' என்ற உணர்ச்சி. சரி ,தப்பு இன்னும் எனக்குத் தெரியாது.

(தொடரும்)

Saturday, 16 May 2009

என் அப்பாவுக்கு ஒரு அஞ்சலி ...

எனக்கு நினைவு தெரிந்த நாட்கள் முதல் என் அப்பா எனக்கு ரொம்ப வசீகரமானவர். துடிப்பானவர்.என் அப்பா என்பதால் இப்படிச் சொல்லவில்லை .அவருக்கே உரித்தான அந்த மிடுக்கான நடையும் ,நகைச் சுவையும், சுற்றியிருக்கும் எவரையும் சுண்டி இழுக்கும் அவரின் குணமும் எல்லாருக்கும் வந்து அமைந்துவிடாது. அவரிடம் நான் எதைப் பற்றியும் கலந்துரையாட முடியும். அவருக்குக் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை தெரியும். அப்படியே என்னுடலில் புகுந்து என்னைப் போல் யோசிக்கத் தெரியும். நான் மனதில் நினைத்ததை நொடிப் பொளிதில் ஊகிக்கும் குறளி வித்தை தெரியும். எது பிழையென்று தெரிந்தாலும் எவர் முகத்துக்கு எதிரிலும் அதை எடுத்தியெம்பும் துணிவான குணம் அவருக்கு. இதனால் அவர் பலர் கோபத்தைத் தேடிக் கொண்டாலும் அவர் குணத்தை மெச்சும் அவர் நண்பர் கூட்டம் ஒன்று அவரைச் சுற்றி எப்போதும் இருந்து கொண்டு இருக்கும். இன்னும் சொல்லப் போனால் என் அம்மாவின் உறவினர் எல்லாம் என் அப்பாமேல் கூட ஈடுபாடு. இது என் அம்மாவுக்கு கொஞ்சம் உறுத்தல் என்று கூடச் சொல்லலாம்.

என் அப்பாவைப் பற்றிய முதல் நினைவு பசுமையாக இன்னும் நினைவில் நிற்கிறது. அப்போ அப்பா கொழும்பில் வேலை செய்கிறார், என் அம்மா ஒரு ஆசிரியை .வேலை மாற்றம் கொழும்பிற்குக் கிடைக்காததால் நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கிறோம். என் அம்மம்மாவின் அரவணைப்பில் நாங்கள் வளர்ந்தோம். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை அப்பா எம்மிடம் வந்து மூன்று நான்கு நாட்கள் நின்று போவார். நாட்களை எண்ணியபடியே அவர் வருகைக்கு நாங்கள் காத்திருப்போம். வரும்போது நாங்கள் கேட்கும் அத்தனை பொருளும் வாங்கி வருவார். ஆனால் உடனே எதையும் தர மாட்டார். நாங்கள் அவரைச் சுற்றிச் சுற்றி வருவதையும், ஆவலோடு எப்போ பெட்டியை திறப்பார் என்று பொறுமையின்றி சலித்துக் கொள்வதையும் மிகவும் ரசிப்பார். நாங்கள் கேட்ட பொருட்களை வாங்க மறந்து விட்டதாகச் சொல்லி எங்களை அழக் கூட வைப்பார். இடையில் அம்மா வந்து 'ஒவ்வொரு முறையும் ஒரு கூத்துப் போடாமல் ஒன்றும் செய்ய மாட்டீர்கள் ' என்று ஒருமுறை தன் அதிருப்தியைக் காட்டிய பின்புதான் ,பெட்டியைத் திறப்பார். அதுவரை நாங்களும் சாப்பிடாமல் , விளையாடாமல் அவர் அருகிலேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருப்போம்.

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. எனக்கு ஐந்து வயதிருக்கும் என்று நினைக்கிறேன். அப்பா வாங்கிவந்த புது பல் விளக்கியில் பசையைப் போட்டு பல் விளக்கியபடி நானும், தம்பியும் நிற்கிறோம். எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்த சரோ அக்கா ஏதோ விடயமாக வந்தவள் எங்களை விசித்திரமாகப் பார்க்கிறாள். என் அம்மம்மாவுக்கு எங்கள் கோபால் பற்பொடியை விட இது என்ன கொம்பு என்ற நினைப்பு. உடனே இவள் அப்பன் கொழும்பில் கப்பல் ஓடுகிறான். அதுதான் இந்தக் கூத்து என்று கிண்டலாகச் சொல்லுகிறாள். அந்த வயதில் எனக்கு அவள் கிண்டல் விளங்கவேயில்லை . நானும் என் மனதில் அப்பா கப்பல் ஓட்டுகிறார் என்று நம்பி விட்டேன்.

என் அம்மம்மாவுக்கு நாங்கள் அப்பாவைக் கண்டதும் தன்னை விட்டு விட்டு அவரைச் சுற்றிச் சுற்றி வருவதும் கும்மாளம் போடுவதும் பெரிய அடிப்பு. ஏதாவது தொண தொண எனச் சொல்லிக் கொண்டேயிருப்பாள். இதில் வேடிக்கை என்னவென்றால் அவளது எந்த மருமகனும் அவளுக்கு முன்னால் நேருக்கு நேர் நின்று கதைக்க மாட்டார்கள். என் அப்பா மட்டும் அவள் பக்கத்தில் போயிருந்து அவள் பழைய கதையெல்லாம் கேட்பார். அவளும் அப்பா இல்லாதபோது ' அவன் எனக்கு மருமகனில்லை, மகன் ' என்று பெருமையாய் சொல்லிக் கொள்வாள். அப்பாவும் அவள் சொன்ன கதைகளை அவளுக்கே திருப்பிச் சொல்லி வம்புக்கு இழுப்பார். இப்படி மாமி மருமகன் அந்நியோனிய உறவைப் பார்த்து வியந்தவர்கள் பலர்.


( தொடரும் ..........)

Thursday, 14 May 2009

என் சிந்தனைத்துளிகள் 3

மனித மனம்

நீங்கள் எப்போதாவது ஒரு இடத்தில் நிலையாக அமைதியாக இருந்ததுண்டா? அந்த அனுபவத்தை உங்களால் விபரிக்க முடியுமா ? அதைவிட ஆனந்தமான விடயம் எதுவுமே இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது. கட்டாயம் நீங்கள் இதை அனுபவித்திருப்பீர்கள் . ஆனால் இந்த இயந்திர வாழ்க்கையில் அந்த உணர்வுகளுக்கு ஆழமான முக்கியத்துவம் கொடுத்திருக்க மாட்டீர்கள். இல்லையென்றால் ஒருமுறை செய்துதான் பாருங்களேன்.

உங்கள் மனத்திற்கு எந்தக் கட்டுப் பாட்டையும் விதிக்காதீர்கள். ஆனால் அது அலை பாயும் விதத்தை மட்டும் அவதானியுங்கள். 'மனம் ஒரு குரங்கு ' என்று ஏன் சொல்லி வைத்தார்கள் என்பதை உணர்வீர்கள். உங்கள் மனம் கொப்புக்கு கொப்பு தாவும் குரங்கு போல ஒரு விடயத்திலிருந்து மற்றதுக்குத் தாவித் தாவித் திரிவதை உங்களால் ரசிக்க முடியும். ஒரு நதி ஓடுவதைப் போல ஒரு பிரவாகமாக மனம் ஓடிக்கொண்டிருப்பதை உங்களால் உணர முடியும். அந்த நதியில் பலர் நீராடுவார்கள், குழந்தைகள் விளையாடுவார்கள், மீன்கள் ஓடிக் கொண்டிருக்கும், பூக்களும் இலைகளும் மிதந்து வரும் .............இதைப் போல உங்கள் மனதும் அலை பாய்ந்தபடியே இருக்கும். பாவம் அதற்கு ஓய்வு என்பதே கிடையாது. ஒரு தாயின் மனம் தன் குழந்தைகளைப் பற்றியும் ,ஒரு பெண்ணின் மனம் தன் காதலைப் பற்றியும்,ஒரு வர்த்தகனின் மனம் தன் இலாபத்தைப் பற்றியும் ...அசை போட்டபடியே இருக்கும்.
இந்த நிலயை ' Mental vacum ' சொல்வார்கள் . இந்த நிலையில் மனத்தினால் பலதையும் அலச முடியுமே தவிர எந்தப் பிரச்சினைக்கும் முடிவு காணும் சக்தி இருக்காது. நிர்மலமான சலனமில்லாத மனங்களினால்தான் ஒரு தீர்வு காண முடியும். இதைப்பற்றித் தான் பலர் புத்தகம் புத்தகமாக எழுதுகிறார்கள். மனதைக் கட்டுப் படுத்துவதும் ,தியானிப்பதும் எங்கள் மனதை நிர்மலமாக்கும் என்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் எனக்குத் தெரியாத விடயங்கள். எனக்குத் தெரிந்தெதெல்லாம் என் அழகான அலை பாயும் குரங்கு மனதுதான்.
.

Wednesday, 13 May 2009

மனதில் நிற்பது

தலையிடி காய்ச்சல் வந்தால்
மலையடிவாரக் கல்லை
வண்டிலில் ஏற்றி வந்து
தலையதைக் கீழே வைத்து
கல்லதை மேலே வைத்தால்
தலையிடி காய்ச்சல் எல்லாம்
தவிடுபோல் பறந்திடுமே.

பிற்குறிப்பு
சின்ன வயதில் அடிக்கடி என் அப்பா சொல்லிக் கேட்டது இது.

Monday, 11 May 2009

என் சிந்தனைத் துளிகள் 2

பெருமை



உங்கள் ஓவியமோ, கவிதையோ முதல் பரிசைப் பெற்று விட்டாலோ ,பரீட்சையில் முதல் பிரிவில் தேர்ச்சி பெற்றாலோ, ஒரு விளையாட்டுப் பந்தயத்தில் நீங்கள் வெற்றியைத் தட்டிக் கொண்டாலோ, நீங்கள் பூரித்துப் போய் விடுவதில்லையா? அதைவிட முக்கியமாக, உங்கள் நண்பர்களும் , உறவினர்களும் உங்களைச் சுற்றிக் கொண்டு 'அபாரம் ','அற்புதம்' என்று போற்றும்போது பெருமைப் பட்டு மகிழ்ந்து போவதில்லையா? இதில் எந்தத் தப்புமே கிடையாது.


அடுத்தமுறை இதேபோல ஒரு வெற்றியை நீங்கள் காணும்போது இதே புகழ்ச்சியை நீங்கள் எதிர்பார்க்கத் தொடங்கி விடுவீர்கள். ஏதோ காரணத்தால் அது கிடைக்காவிட்டால் மனமொடிந்து போய் விடுவீர்கள். அந்த வெற்றியை திரும்பவும் சாதிக்க வேண்டும் என்ற உற்சாகத்தை இழந்து விடுவீர்கள். இதற்குக் காரணம் எம்மை அறியாமலேயே இந்தப் புகழ்ச்சிகளுக்கு நாங்கள் அடிமைப் பட்டுப் போவதுதான்.


நீங்கள் பெரியவர்களாகும் போது எப்போதும் மற்றவர்களின் பாராட்டைத் தேடுகிறீர்கள் .நீங்கள் 'சமூக சேவை செய்கிறேன்' 'கடவுளுக்கு நன்றி சொல்ல கோவிலைக் கட்டுகிறேன் ' 'என் தமிழ் இனத்துக்குச் செய்கிறேன்' என்று சொன்னாலும் ,அடிப்படை உண்மை என்னவென்றால் , நீங்கள் செய்வது பலருக்கும் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ,உங்கள் மகிழ்ச்சிக்காக தான் இதனைச் செய்கிறீர்கள் . இதனால் நீங்கள் செய்யும் சேவைகளின் பலனையும் இழந்து விடுகிறீர்கள்.

சிந்தித்துப் பார்க்கையில் , எங்கள் வாழ்க்கையில் நாம் சாதித்தச் சின்னச் சின்ன வெற்றிகளும் .அதற்குக் கிடைத்த அபாரமான எமது பெற்றோரின் பாராட்டுக்களும்தான் எங்களை இப்படி இந்த நோய்க்கு அடிமையாக்கி விட்டது என்று தோன்றுகிறது. ஆனால் அதைத்தானே இப்போ நான் என் பிள்ளைகளுக்கும் செய்து கொண்டிருக்கிறேன்!

இந்த நோயைத் தடுப்பது எப்படியென்று தடுமாறி நிற்கிறேன்.

.

Saturday, 9 May 2009

விசித்திரமான வழக்கு

இந்த வழக்கு எப்போ முடியும் ?

தமிழனுக்கு எப்போ விடிவு பிறக்கும் ?

ஒரு அர்த்தமுள்ள நடனம்

விடை கொடு எங்கள் நாடே!
வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம் !
இது ஒரு தமிழனின் உணர்ச்சிப் பிரவாகம்.

Wednesday, 6 May 2009

என் சிந்தனைத் துளிகள் 1

வித்தியாசங்கள்


நீங்கள் எப்பவுமே உங்களை ஒரு தனித்துவமானவராக நினைத்ததுண்டா? உங்கள் எண்ணம் ,அறிவு ,ஆற்றல் ,சம்பிரதாயங்கள ,சாதி ,மதம், தோலின் நிறம் ,பேசும் மொழி ,ஏழை பணக்காரன் ,எந்த நாட்டுக்காறன்............. என்று எம்மிடையே ஆர்ப்பரிக்கும் வித்தியாசங்கள் எண்ணுக்கடங்காதவை  என்று உணர்ந்ததுண்டா? இல்லவே இல்லை என்று பொய் சொல்லாதீர்கள்?

ஆனால் உன்னித்துப் பார்க்கையில் எம்மிடையே உள்ள ஒற்றுமையான குணங்கள் எத்தனை! எத்தனை! சிங்களவனோ தமிழனோ,அமெரிக்கனோ இந்தியனோ ,இந்துவோ கிறிஸ்தவனோ , ஏழையோ பணக்காரனோ ........நாம் அனைவரும் மனித குலத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் நேசிக்கிறோம்,பிறர் எங்களை நேசிக்க வேண்டுமென்று ஏங்குகிறோம்,இன்பத்தையும் அமைதியையும் எப்பவுமே விரும்புகிறோம் ,பயப்பிடுகிறோம்,எமக்குப் பாதுகாப்பை வேண்டுகிறோம், சாப்பிடுகிறோம் ......
இப்படி எமக்குள் உள்ள ஒற்றுமைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் எமக்கிடையே உள்ள வேறுபாடுகள் எங்கள் மனதில் விஸ்வரூப மெடுத்து  எங்களுக்குள்ள இந்தப் பாரிய அடிப்படை ஒற்றுமைகளை மங்க வைத்து விட்டன .

நீங்கள் ஒருவரை மனதாரக் காதலிக்கும்போது,அவர் இந்துவோ,இந்தியனோ, கறுப்பனோ,குள்ளனோ...என்ற எண்ணங்கள் இல்லாமல் போவது உண்மையல்லவா? இதனால்தானே காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். என் இளவயதில் ஒரு அபூர்வத் தம்பதிகளை நான் சந்தித்திருக்கிறேன். .என் பாடசாலைக்கருகில் குடியிருந்தார்கள்.பார்த்தவர்களைத் திரும்பிப்  பார்க்கவைக்கும் அழகுள்ள பெண்மணி அவள்.  கணவர் குள்ளச் சாதி, பறங்கி. அவரது உயரம் அவள் இடுப்பளவுதான். அவர்கள் தினம் கைகோர்த்துச் செல்வதைக் கண்டு நான் இதுதான் காதலா! என வியந்திருக்கிறேன். ஒருவரையொருவர் ஆழமாக அன்பு செய்து ,அவர்கள் நலனில் அக்கறை கொள்ளும்போது, எம் கண்ணுக்கு வேறுபாடுகள் மறைந்து  ,எமது நம்பிக் கைகள்  நகர்ந்து , ஒற்றுமைகள் பெரிதாவதுதான்  காரணம்.
துரதிஸ்டவசமாக எமக்கு எம் நம்பிக்கைகளைக் களைந்தெறிவதும் ,ஆழமாக அன்பு செய்வதும் மிகக் கடினமான விடயமாகி விட்டது . வேற்றுமைகள் மேலோங்கி ஒருவ்ரை ஒருவர் கொன்று குவிக்கும் கும்பலுக்கிடையே  வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . எங்கள் நம்பிக்கைதான் எங்கள் எதிரி . எங்களின் சாபக்கேடு. 

எப்போ எங்கள் மூட நம்பிக்கைகளை நாங்கள் முற்றாக மறந்து  விடுகிறோமோ , எப்போ மற்றவனை எம்மைப்போல் நேசிக்கிறோமோ, அப்போதான் எமக்கு விடிவு. இது எப்போ சாத்தியமோ,  அப்போதான் எமது ஒற்றுமைகளையும் ,    உண்மைகளையும் நாம் முற்றாக உணர்ந்து கொள்ள முடியும்.



Sunday, 3 May 2009

அறிமுகம்

விதியின் வித்தையால் புலம் பெயர்ந்து இங்கிலாந்தில் கரையேறிய பலலட்சம் தமிழரில் நானும் ஒருத்தி . அந்நிய தேசத்தில் சுமார் இருபது வருடங்களுக்கு மேல் வாழ்ந்துவிட்டேன். நான் கற்றது கைமண்ணளவு . கல்லாதது உலகளவு .

என் வாழ்க்கைப் பயணத்தில் நான் சந்தித்தவர்கள் பலவிதம். எனது அனுபவங்கள் என்னைப் பொறுத்த வரையில் எனது பொக்கிஷங்கள்.
அவற்றிற்கு நிகர் வேறெதுவுமில்லை . நல்லதோ ,கெட்டதோ எதையும் நான் மறக்க விரும்பவில்லை. இறந்த காலங்கள் சிலரைக் குத்திக் குதறி அவர்கள் எதிர்காலத்தை நாசம் பண்ணியதை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் என் இறந்த காலம் எனக்குப் பாடம் புகட்டி , என்னைப் புடம் போட்டு பக்குவப் படுத்தியதைத்தான் நான் உணர்கிறேன்.
எனக்குப் பிடித்த கதைகளையும் .எனதும் என்னைச் சுற்றியுள்ளோரினதும் அனுபவங்களையும் , சிந்தனைகளையும் என் இனிய தமிழில் வடிக்கும் ஆவலில் இந்த வலையத்துக்கு அறிமுகமாகிறேன்.
என் எழுத்துக்கள் என் சிந்தனைத் துளிகளுக்கு ஒரு வடிகாலாக அமையும் என்று நம்புகிறேன். மாறாக அவை எவரையும் புண் படுத்தினால் என்னை மன்னித்து விடுங்கள். என் கருத்துக்கள் தப்பென்று கருதினால் ' ஒரு குட்டி நாய் குலைக்கிறது' என்று தள்ளிப் போய் விடுங்கள்.