Tuesday 18 August 2009

என் அம்மா




அம்மா என் அம்மா
அன்பு காட்டி அரவணைத்து ஆராரோ பாடிய
அருமைத் தாயே நீ வாழ்க !

அணுவுக்கு உருக்கொடுக்க உன்
உதிரத்தைத் தானம் செய்த உத்தமியே நீ வாழ்க!

உடலினைக் கொடுத்து, உபாதையில் நலிந்து
உலகினில் ஓளி காட்டிய தீபமே நீ வாழ்க!

அன்பைக் காட்டி அறிவை ஊட்டி
பாசத்தை ஊற்றி நேசமாய் வளர்த்த வாசமலரே நீ வாழ்க!

அழியாச் சொத்துக் கல்விச் செல்வமென
மொழியறிவூட்டிய மேதையே நீ வாழ்க!

சமய விழுமியங்கள் சற்றும் பிசகாது
சன்மார்க்க வழி தந்த சற்குருவே நீ வாழ்க !

சுகங்களைத் துறந்து உன் சுதந்திரம் இழந்து
சுகமாக நான் வளர உன் நலன்களை மறந்த தியாகியே நீ வாழ்க !

என் உயர்வினில் நீ உளம் மகிழ்ந்தாய் ,
என் சிறப்பினில் நீ சிந்தை குளிர்ந்தாய்,
எனை உத்தமனாக்க உயிரையும் கொடுப்பாய்.

ஏது செய்வேன் உனக்காக?
ஏங்குகிறதே என் மனது .
எம் பெருமான் யேசு மகான்
என்றும் உனைக் காக்க வேண்டும்
நீடிய ஆயுளுடன் கூடிய சுகம் கண்டு
நித்தம் சிரித்து , நீ வாழ வேண்டும்
அஞ்சலித்தேன் உன் பாதம்
ஆசிதனை ஈந்திடுவாய் .

மூலம்: கவிதை மலர்க்கொத்து
ஆசிரியர்: Blossom Joseph

புலம் பெயர்ந்து வாழும் ஒரு இளைப்பாறிய ஆசிரியை வடித்த அழகான, ஆழமான கருத்துள்ள கவிதைகள் இந்த ஆடி மாதம் கனடாவில் ஒரு கவிதை மலர்க்கொத்தாக வெளியிடப் பட்டது. நான் நுகர்ந்த இந்த நறுமணத்தின் ஒரு துளியை நீங்களும் நுகர அவரின் ஒரு கவிதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினேன்.


.




1 comment:

வருகைக்கு நன்றி. உங்கள் கருத்தைச் சொல்ல மறக்காதீர்கள்!